உள்ளடக்கத்திற்குச் செல்
திரும்பு

தேவாங்கர் ஒற்றுமை நாள் · நவம்பர் 22

ஒற்றுமை உறுதிமொழியில் கையெழுத்திடுங்கள்

தேவாங்கர் ஒற்றுமை நாளான நவம்பர் 22 அன்று, ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள தேவாங்கர்கள் ஒன்றாகச் சேர்ந்து தேவாங்கர் ஒற்றுமைச் சாசனத்தில் கையெழுத்திடுவார்கள். நீங்கள் அதைக் கீழே படித்துப் பார்க்கலாம்; அது உங்கள் மனதுக்கு ஏற்றதாக இருந்தால், இந்த ஆண்டு ஒருமுறை கையெழுத்திடலாம்: இங்கேயே (நீங்கள் உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும்), அல்லது உங்கள் வட்டாரக் கூட்டத்தில் காகிதத்தில்.

அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம்

தேவாங்கர் ஒற்றுமை நாள் – 2026

நவம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

தேவாங்கர் ஒற்றுமை சாசனம்

ஒற்றுமை • ஒருங்கிணைப்பு • சமுதாய முன்னேற்றம்

நமது நோக்கம்

தேவல மகரிஷி ஜெயந்தி திருநாளை முன்னிட்டு, தேவாங்க குல மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, நமது பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், திருக்கோவில்கள், வணிகம், இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொது வாழ்வில் சமுதாயத்தின் பங்களிப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், நவம்பர் 22ஆம் தேதியை தேவாங்கர் ஒற்றுமை நாளாகக் கொண்டாடுகிறோம்.

இந்த ஒற்றுமை நாள் விழாவாக மட்டும் இல்லாமல், தேவாங்கர் சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான ஐந்து முக்கிய உறுதிமொழிகளை சபதமாக அனைவரும் ஏற்றுக்கொண்டு, அவற்றைச் செயல்படுத்தும் நாளாக அமைய வேண்டும்.

பகுதி – 1

தேவாங்கர் ஒற்றுமை நாள் கொண்டாடுவதற்கான வழிமுறைகள் மற்றும் பொறுப்புகள்

1. விழா ஏற்பாடு மற்றும் பொறுப்பு

அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றத்தின் பொறுப்பாளர்கள், தங்களது பொறுப்பிற்குட்பட்ட ஊர்கள் மற்றும் பகுதிகளில் தேவாங்க குல மக்களை ஒருங்கிணைத்து, தேவாங்கர் ஒற்றுமை நாள் விழாவை முன்னின்று ஏற்று நடத்த வேண்டும். அந்தந்த பகுதி நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள், சமுதாயப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் விழாவைச் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

2. குல மக்களை ஒன்றிணைத்தல்

தேவாங்க குலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மகளிர் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, சமுதாய ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டும்.

3. சமுதாயப் பொறுப்பாளர்கள் மற்றும் குல அமைப்புகளை ஒருங்கிணைத்தல்

ஸ்தல பட்டக்காரர்கள், தாய்மனை செட்டிக்காரர்கள், கட்டமனை செட்டிக்காரர்கள், செட்டிமை, பெரியதனம், சேஷராஜ், திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் தேவாங்க குலத்தைச் சேர்ந்த அனைத்து அமைப்புகள், சங்கங்கள், அணிகள் , பேரவைகள் மன்றங்கள்,ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, இந்நிகழ்வில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

4. அனைத்து ஊர்களிலும் ஒரே நாளில் கொண்டாடுதல்

வருகின்ற 22.11.2026, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு, தேவாங்க குல மக்கள் வாழும் அனைத்து ஊர்கள் மற்றும் பகுதிகளிலும் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில்களில் தேவாங்கர் ஒற்றுமை நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

5. தேவாங்க குல ரிஷபக் கொடி ஏற்றுதல்

ஒவ்வொரு ஊர் மற்றும் பகுதியிலும் தேவாங்க குல மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையின் அடையாளமாக ரிஷபக் கொடியை ஏற்ற வேண்டும்.

6. ஐந்து உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்ளுதல்

தேவாங்கர் ஒற்றுமை நாள் விழாவில் பங்கேற்கும் அனைவரும் நமது ஐந்து உறுதிமொழிகளையும் வாசித்து, அவற்றை ஏற்றுக்கொண்டு, தங்களது ஊர் மற்றும் பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

7. ஊருக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை நடத்துதல்

அந்தந்த ஊர் மற்றும் பகுதிகளின் சூழ்நிலைக்கு ஏற்ப, தேவாங்கர் சமுதாயத்தின் ஒற்றுமை, பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியை எடுத்துரைக்கும் வகையில் கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இளைஞர் மற்றும் மகளிர் சந்திப்புகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும்.

பகுதி – 2

நமது ஐந்து உறுதிமொழிகள்

தேவாங்கர் ஒற்றுமையின் அடிப்படை நோக்கங்கள்

1. நமது பண்பாடு – நமது அடையாளம்!

நமது தேவாங்கர் சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மரபுகளைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்போம்.

2. நமது கோயில்கள் – நமது கட்டுப்பாட்டில்!

சமுதாயத் திருக்கோவில்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, குலமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நமது குலக் கோயில்கள் அனைத்தையும் மீட்டெடுத்து பாதுகாப்போம்.

3. நமது வணிகம் – நமது வளர்ச்சி!

நமது சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகள், தொழில் முனைவோர் மற்றும் வணிகர்களின் வளர்ச்சிக்கு ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க உறுதியேற்போம்.

4. நமது இளைஞர்களுக்கு – நமது முன்னுரிமை!

நமது சமூகத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு, தேவாங்கர் குல நிர்வாகிகள் நடத்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க உறுதியேற்போம்.

5. பொது வாழ்வில் நமது சமூகத்தின் ஒற்றுமையான குரல்!

வார்டு, ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து பொது நிர்வாக நிலைகளிலும் நமது சமூகத்தைச் சேர்ந்த தகுதியானவர்களை போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்கு சேவையாற்ற ஊக்குவித்து ஆதரவளிப்போம்.

பகுதி – 3

நமது ஒற்றுமை வாக்குறுதி

நமக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரங்களில், ஒருவருக்கொருவர் மதிப்பளித்து, அன்புடனும் மரியாதையுடனும் கலந்துரையாடி, இணக்கமான தீர்வுகளைக் காண்போம்.

தேவாங்கர் குல சமுதாயத்தின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, ஒட்டுமொத்த முன்னேற்றம் ஆகியவற்றை நமது முதன்மை இலட்சியமாகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவோம்.

நமது ஊர், அரசியல் சார்பு, தொழில், பொருளாதார நிலை என எத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும், நமது குல அடையாளத்தையும் உறவின் பெருமையையும் போற்றி, முதலில் நாம் தேவாங்கர்; நாம் ஒன்றிணைந்த தேவாங்கர் என்ற உணர்வுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று உறுதியுடன் சபதம் ஏற்போம்!

பகுதி – 4

தேவாங்கர் ஒற்றுமை நாள் – செயல்பாட்டு உறுதிப்பாடு

தேவாங்கர் ஒற்றுமை நாள் என்பது ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் விழாவாக மட்டும் இல்லாமல், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு இல்லத்திலும், ஒவ்வொரு தலைமுறையிலும் ஒற்றுமை உணர்வையும் சமூகப் பொறுப்பையும் வளர்க்கும் இயக்கமாக அமைய வேண்டும்.

அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றத்தின் பொறுப்பாளர்கள், அந்தந்த ஊர் மற்றும் பகுதி நிர்வாகிகளுடன் இணைந்து, ஐந்து உறுதிமொழிகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து, அவற்றைச் செயல்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாம் ஏற்றுக்கொள்ளும் உறுதிமொழிகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல், நமது அன்றாடச் செயல்பாடுகளில் நடைமுறைக்கு வர வேண்டும். இதற்காக அனைத்து ஊர் நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள், சமுதாயப் பொறுப்பாளர்கள், அமைப்புகள், சங்கங்கள், இளைஞர்கள், மகளிர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

நமது ஒற்றுமை முழக்கம்

ஒற்றுமையே நமது பலம்!

ஒத்துழைப்பே நமது வளர்ச்சி!

ஒன்றிணைவதே நமது எதிர்காலம்!

விழா ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம்

தேவாங்கர் ஒற்றுமை நாள் – 22.11.2026

நமது ஒற்றுமை நமது பலம்; நமது ஒற்றுமை நமது எதிர்காலம்!

உங்கள் கையெழுத்து